2 லாரிகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான லாரியில் பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு வெள்ளரிக்காய் ஏற்றி கொண்டு வரப்பட்டது. இந்த லாரியை தர்மபுரியை சேர்ந்த மாதுசாமி என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் லாரி மேம்பாலம் அருகில் உள்ள பட்டறையில் சோதனைக்காக நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது பட்டறையில் வேலை செய்த தொழிலாளர்கள் மதிய நேரம் என்பதால் சாப்பிட சென்றிருந்தனர்.
இதனையடுத்து வெள்ளரிக்காய் ஏற்றி கொண்டு வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது லாரியின் டீசல் டேங்க் வெடித்ததால் அங்கு பழுதுபார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த மணி என்பவரின் மற்றொரு லாரி மீதும் தீப்பற்றியது. இதனையடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களிலும் தீ பிடித்து எரிந்தது. இதனை அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.