சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் 9-வது வார்டு வீரபாண்டியன் தெரு, அம்பேத்கர் தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் குடிநீர் வினியோகம் நகராட்சி சார்பில் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் குடிநீர் விநியோகம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் வாகனமும் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அங்குள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து குடிநீர் எடுத்து வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு போதுமான அளவிற்கு தண்ணீர் எடுத்து பயன்படுத்த முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென அம்பேத்கர் தெரு பகுதியில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனை அறிந்த நகர்மன்ற உறுப்பினர் ஜெயலஷ்மி,, நம்பிராஜன் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து நகராட்சி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு குடிநீர் குழாய் சேதமடைந்ததை கண்டறிந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.