நெல்லை பழையபேட்டையில் வசித்து வருபவர் கட்டிட காண்டிராக்டர் பொன்னுத்துரை (80). இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு பொன்மலர்(40) மகள் இருக்கிறார். இவரது கணவர் சண்முகநாதன் ஆவார். இந்த நிலையில் பொன்மலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவரை கோவைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர். இந்த வாகனத்தை தொடர்ந்து செல்லம்மாள் காரில் சென்றிருக்கிறார். அந்த காரை நெல்லையை சேர்ந்த டிரைவர் ராஜா (38) என்பவர் ஓட்டினார். இந்த கார் நேற்று மாலை 5:45 மணிக்கு மதுரை-திண்டுக்கல் 4 வழி சாலையில் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் கார் மோதியது. இதனால் கார் சேதமடைந்து இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே செல்லம்மாள், டிரைவர் ராஜா இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்லம்மாள், ராஜா ஆகிய இருவரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கனக சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை போன்றோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.