பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாகாணத்தில் பத்தாயிரம் வீடுகள் சேதம் அடைந்திருக்கின்றது. ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 930 பயிர் நிலங்கள் மற்றும் 565 கிலோமீட்டர் சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. 712 கால்நடைகள் உயிரிழந்திருக்கின்றது. இதுவரை மொத்தம் 124 பேர் பலியாகியுள்ளனர். இதனை மாகாண முதன்மை செயலாளர் அப்துல் அஜீஸ் உகைலி உறுதிப்படுத்தி இருக்கின்றார். மேலும் தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பரவலாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் அழிந்து போய் இருக்கின்றது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகள் இல்லாமல் திறந்த வெளியிலே வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். ஏறக்குறைய அனைத்தும் சேதமடைந்துள்ளது என ஏ ஆர் ஒய் நியூஸ் தகவல் தெரிவித்து இருக்கின்றது. அதே நேரம் மாகாணத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல அணைகளில் நீர் நிரம்பி வருகின்றது. கனமழையால் ஏழு அணைகள் உடைந்துள்ளன என மாகாண பேரிடர் மேலாண் கழகம் கூறியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் சிந்து கில் கிட் பாகிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா போன்ற மாகாணங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றார்கள். இதனை முன்னிட்டு மக்களை மீட்க மற்றும் நிவாரண பணிகளில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக பலூசிஸ்தானின் லாஸ்ட் பெல்லா பகுதியில் வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சேர்ந்து இருக்கிறது.
எனினும் பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மாயமானதாகவும் அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து விபத்துக்குள்ளாகி இருக்கின்றது என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது பற்றி பலூசிஸ்தான் போஸ்ட் வெளியீட்டுள்ள செய்தியில் காணாமல் போன ஹெலிகாப்டர் வின்தர் மற்றும் சஸ்சி புன்னு ஆலயம் பகுதிகளுக்கு இடையே வெடித்திருக்கின்றது. அதில் லெப்டினன்ட் ஜெனரல் சப்ராஸ் அலி மற்றும் வீரர்கள் ஐந்து பேர் என மொத்தம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 6 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து மீட்பு பணிகள் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் ராணுவ ஹெலிகாப்டர் காணாமல் போன செய்தி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விபத்திற்கு உள்ளானது பற்றி பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தப்படவில்லை.