2 பேருந்து ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள எழுமாத்தூர் கிராமத்திற்கு ஈரோட்டில் இருந்து தினமும் அரசு பேருந்து ஒன்று சென்று வருகிறது. இந்த பேருந்து செல்லும் அதே நேரத்தில் ஒரு தனியார் பேருந்தும் இந்த கிராமத்திற்கு சென்று வருகிறது. இதனால் 2 பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அரசு பேருந்து எழுமாத்தூர் நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக தனியார் பேருந்தும் வந்தது. இதனையடுத்து 2 பேருந்து ஓட்டுநர்களும் பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு வாக்குவாதம் செய்தனர்.
இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 2 பேருந்து ஓட்டுநர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து போக்குவரத்தை எடுத்து சென்றுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.