பள்ளியிலிரு66ந்து இடைநின்ற மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு என்ற மிகப்பெரிய திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக பள்ளியில் இருந்து இடை நின்றவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாளியாம்பட்டி கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் வீடு வீடாக சென்று மாணவிகளின் தேவைகளின் மற்றும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன் பிறகு மாணவிகளுக்கு வேண்டிய புத்தகங்கள், சீருடை, புத்தகப் பை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாவட்ட ஆட்சியர் மாணவிகளுக்கு வழங்கி, பள்ளிக்கூடம் செல்வதற்காக புதிய பேருந்து வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தார். இதைதொடர்ந்து மாணவிகள் பேருந்தில் பள்ளிக்கு செல்லும் போது மாவட்ட ஆட்சியரும் உடன் சென்றார். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளிக்கு சென்ற பிறகு அவர்களுக்கு குங்குமம் மற்றும் இனிப்பு கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். மேலும் பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட முழுவதும் ஆய்வு செய்து இடைநின்ற மாணவ- மாணவிகளை கண்டுபிடித்து பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கூறியுள்ளார்.