கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரத்தில் மாணிக்கம்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராகவன்(25), குமார் ராஜா(21) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மாணிக்கம் தனது மகன்களுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மூன்று பேரும் மீண்டும் ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர். இந்நிலையில் வடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது மாணிக்கத்தின் கார் எதிரே வந்த மகேஷ் என்பவரது கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் மாணிக்கம், செல்வராகவன், குமார் ராஜா, மற்றொரு காரில் வந்த மகேஷ், ராஜ், ஜெயதுல்லா ஆகிய 6 பேரும் காயம் அடைந்தனர். விபத்து ஏற்பட்டதும் மகேஷின் கார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணித்தனர். இதற்கிடையே காயமடைந்த 6 பேரையும் அக்கம் பக்கத்தினர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.