17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேங்கபுத்தரி கிராமத்தில் 17 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து விட்டு போளூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் கடந்த 23-ஆம் தேதி வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வீட்டுக்கு வராததால் அவரது தந்தை பல இடங்களில் அவரை தேடினார். இதுகுறித்து பெண்ணின் தந்தை போளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான பெண்ணை தேடி வந்தனர். இந்நிலையில் போளூர் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் பொக்லைன் டிரைவர் இளம் பெண்ணை கடத்தி சென்று கடந்த 30-ஆம் தேதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பொக்லைன் டிரைவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.