தமிழ்நாடு ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பாக தர்மபுரி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஊராட்சிமன்ற தலைவர்கள் பாய், தலையணையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவலறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், டவுன் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
மேலும் அனுமதியில்லாமல் இதுபோன்ற போராட்டங்களை நடத்தக்கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அப்போது ஊராட்சிமன்ற தலைவர்கள் கூறியிருப்பதாவது “ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்ட பணிகளுக்கான டெண்டர் சம்பந்தப்பட்ட ஊராட்சியிலேயே வைக்காமல் பேக்கேஜ் முறையில் கலெக்டர் அலுவலகத்தில் விடப்படுகிறது. இதன் காரணமாக ஊராட்சிகளில் நிறைவேற்றப்படும் திட்டப் பணிகள் தரமில்லாமல் போய் விடுகிறது.
ஆகவே பேக்கேஜ் டெண்டர்முறையை ரத்து செய்து அந்தந்த ஊராட்சிகள் (அல்லது) ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் டெண்டர் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என கூறினர். அதனை தொடர்ந்து கலெக்டர் சாந்தி, ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்துசெய்ய அரசால் மட்டுமே இயலும். டெண்டரை தள்ளிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினர். அதன்பின் ஊராட்சிமன்ற தலைவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.