ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொற்றியோடு அருகே கன்றுபிலாவிளை பகுதியில் கட்டிட தொழிலாளியான ஜோசப் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி எல்சிபாய் என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவருடைய மகன் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில், நேற்று முதல் நாள் என்பதால் எல்சிபாய் தன்னுடைய மகனை கல்லூரியில் விடுவதற்காக உடன் சென்றுள்ளார். அதன் பிறகு மண்டைக்காட்டு பகுதியில் இருந்து திங்கள்நகர் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார்.
இவர் திங்கள் நகரில் இறங்கிய போது திடீரென கழுத்தில் அணிந்திருந்த 51/2 பவுன் தங்க நகைகளை காணாததால் எல்சிபாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது தான் எல்சிபாய்க்கு தன்னுடைய நகைகளை பேருந்தில் யாரோ திருடியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இரணியல் காவல்நிலையத்தில் எல்சிபாய் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.