வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.12,500 ரொக்க பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து முருகன் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் வீட்டில் அத்துமீறி நுழைந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று பின்பக்க சுவரில் ஏறி குதித்து சென்றது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் வீட்டில் நுழைந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.