அதிமுக கட்சியை அழிப்பதற்கு பாஜக திட்டமிட்டுள்ளதாக தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியை ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வழிநடத்தி சென்றனர். இந்த கட்சியில் திடீரென ஒற்றைத்தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங் களாக மாறி ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்தனர். கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவோடு இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை இபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
இந்த தகவலை தெரிந்து கொண்ட ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கே.பி முனுசாமி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோருக்கு இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருவதால் கட்சியின் தொண்டர்கள் மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கின்றனர். இதனையடுத்து அம்மா ஜெயலலிதா பிரதமர் மோடியை பார்ப்பதற்கு மறுத்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை வரவேற்க சென்றதும், ஓபிஎஸ் பிரதமரை வழி அனுப்ப சென்றதும் மிகப்பெரிய அதிருப்தியை தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கட்சியில் நடக்கும் பிரச்சனைகளை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சாமர்த்தியமாக காய் நகர்த்துகிறது என்றும், அதிமுகவின் இடத்திற்கு வருவதற்கு பாஜக திட்ட மிட்டுள்ளதாகவும் கட்சியின் தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.