குளிர்பானம் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருமாபாளையம் பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜமுனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று சஞ்சய் அவரது பாட்டி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குளிர்பானம் என நினைத்து எடுத்துக் குடித்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் களைத்து சஞ்சய்க்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவரது பாட்டி சஞ்சயிடம் கேட்டபோது குளிர்பானம் என நினைத்து அந்த பாட்டிலில் உள்ளதை குடித்து விட்டேன் என கூறியுள்ளளார். இதனையடுத்து சஞ்சய்யை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சேவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.