சீனாவிலுள்ள தனியார் மழலையர்பள்ளி ஒன்றில் இன்று நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் 6 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. தென் கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணம் அன்ஃபு கவுண்டியிலுள்ள தனியார் மழலையர் பள்ளியில் இத்தாக்குதல் அரேங்கேறியுள்ளது. இன்று காலை சுமார் 10 மணியளவில் முகமூடி மற்றும் தொப்பி அணிந்த நபர் ஒருவர் திடீரென பள்ளிக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. சந்தேகத்துக்குரிய அந்நபர் லியு (48) எனவும் தலைமறைவாக உள்ள அவரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீப வருடங்களில் சீனாவில் பள்ளிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டு சோங்கிங் நகரில் பெண் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 14 குழந்தைகள் காயமடைந்தனர். 2020-ம் வருடம் குவாங்சி பகுதியிலுள்ள மழலையர் பள்ளி ஒன்றில், பள்ளி காவலர் ஒருவர் 39 குழந்தைகள் மற்றும் ஊழியர்களை கத்தியால் குத்தினார். அதன்பின் சென்ற வருடம் சீனாவின் தெற்கு குவாங்சி தன்னாட்சிப் பகுதியிலுள்ள மழலையர்பள்ளி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 16 குழந்தைகள் மற்றும் 2 நர்சரி ஆசிரியர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.