டிராக்டர் சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நம்பேடு கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது டிராக்டரில் வந்தவாசி-ஆரணி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென டிராக்டர் பழனியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பழனியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.