ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஐமன் அல் ஜவாஹிரி மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சூழலில் அல்ஜவாஹிரின் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக அமெரிக்க குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால் வெளிநாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை எடுத்துள்ளது. இது பற்றி அமெரிக்கா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அல் ஜவாஹீரின் மரணத்தை தொடர்ந்து அல்கொய்தாவின் ஆதரவாளர்கள் அல்லது அதனுடன் இணைந்த பயங்கரவாத அமைப்புகள் அமெரிக்க நிலைகள் பணியாளர்கள் மற்றும் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்யலாம்.
அதனால் அமெரிக்க குடிமக்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அதிக விழிப்புணர்வை கடைபிடிக்க வேண்டும். மேலும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உள்ளூர் செய்திகளை கண்காணிக்கவும் அருகில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணை தூதரகத்துடன் தொடர்பு பேணுவோம் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் அவசர காலத்தில் அவர்களை கண்டறிவதை எளிதாக்குவதற்கு ஸ்மார்ட் டிராவலர் என்றோல்மென்ட் திட்டத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.