மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விலியவிளாகம் பகுதியில் உன்னிகிருஷ்ணன் நாயர்-கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அனகா என்ற மகளும், ஆதித்யா தேவ் என்ற மகனும் இருந்துள்ளனர். அனகா கல்லூரி படித்து வருகிறார். ஆனால் ஆதித்யா தேவ் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்விற்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆதித்யா தேவ் அனகாவுடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு குலசேகரம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து இவர்களின் மீது மோதியது. இதில் ஆதித்யா தேவ் பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மேலும் அனகா படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அனகாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அதன்பின்னர் ஆதித்யா தேவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநரான ஜெயராஜ் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.