கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் கடந்த 27-ஆம் தேதி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணை இரவு 11 மணி வரை நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய கட்டிடம் 3.45 கோடி மதிப்பில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஐ. பெரியசாமி நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பாஜகவும், அதிமுகவும் கூச்சலிட்டு கொண்டு இருக்கின்றனர். இந்த மின் கட்டண உயர்வுக்கு காரணம் அதிமுக ஆட்சியின் போது உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டது தான். இந்திய நாடானது சுதந்திரம் அடைந்த பிறகும் கூட பாஜக அரசு உப்புக்கும், உணவுக்கும் ஜிஎஸ்டி வரியை விதிக்கிறது.
இந்நிலையில் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நீட் தேர்வு மூலமாக கலைத்த மத்திய அரசு, பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வை அறிமுகப்படுத்தி கிராமப்புற மாணவ-மாணவிகளின் பல்கலைக்கழக கனவை தற்போது கலைத்துள்ளது. இதனையடுத்து கிராமப்புற மாணவ- மாணவிகளுக்காக கிராமிய பல்கலைக்கழகங்கள்தொடங்கப்பட்ட நிலையில், க்யூட் நுழைவு தேர்வு தொடங்கப்பட்டதால் கிராமப்புற மாணவ-மாணவிகள் பல்கலைக்கழகங்களில் படிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால், புதிதாக 6 கல்வி நிறுவனங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதோடு, ஏழை விவசாயிகளுக்கு கறவை மாடுகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடைபெறும் என அண்ணாமலை கூறியுள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அமலாக்க துறையையும், சிபிஐ-யும் தங்கள் கைவசம் வைத்துக்கொண்டு இஷ்டம் போல் ஆட்டம் போடுகின்றனர். இந்தியாவில் நீதிமன்றங்கள் இருப்பதால் மட்டுமே நீதி இன்னும் நிலைநாட்டப்படுகிறது. மத்திய அரசானது அரசியல் லாபத்திற்காக சுயநலமாக செயல்பட்டால் சட்டம் அதற்கு இடம் கொடுக்காது எனவும், இலங்கையில் ஏற்பட்ட நிலை தான் ஏற்படும் என கூறினார். மேலும் அதிமுக பிரேக் இல்லாத வண்டியாக கடந்த 10 வருட ஆட்சிக்காலத்தில் ஓடியது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து தான் மக்களுக்கு வேண்டிய அனைத்து விதமான நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது என்றார்.