75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தபால் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தேசியக்கொடி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கண்காணிப்பாளர் எம். பொன்னையா நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி அதிக அளவில் கிடைப்பதற்காக தபால் நிலையங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றது.
இதில் முதல் கட்டமாக இம்மாவட்டத்திற்கு 16,000 தேசியக் கொடிகள் வரவழைக்கப்பட்டு 215 கிராம தபால் நிலையங்கள் மூலமாக 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை நேரடியாக தபால் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தபால் துறையின் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனிலும் பெற்றுக் கொள்ளலாம். அதன்பின் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு தபால்காரர்கள் மூலமாக நேரடியாக வாடிக்கையாளர் வீட்டுக்கு சென்று வினியோகிக்கப்படும்.
இதனை அடுத்து தபால் அலுவலகத்தில் தேசியக் கொடியை வாங்குபவர்கள் செல்பி எடுப்பதற்கான சிறப்பு இடமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதையும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து மொத்தமாகவும் தேசியக்கொடி தேவைப்படுபவர்கள் வணிக நிர்வாக அலுவலர்கள் பொன்ராம் குமார் 9942693129 மற்றும் முகமது சமீம் 9791655030 ஆகிய இருவரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதைப் போன்று 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தபால் துறை சார்பாக ஸ்ரீவைகுண்டம் உள்பட 3 இடங்களில் விழிப்புணர்வு நடைப்பயணம் 8-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பின்னர் மற்ற இடங்களில் 12-ஆம் தேதி நடைபெற இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.