உலகத் தாய்ப்பால் வாரத் தொடக்க விழா குழந்தைகள் நல மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரத் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு மற்றும் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் தேரணிராஜன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது டாக்டர் தேரணிராஜன் கூறியதாவது, இதுவரை உலக சுகாதார மையத்தின் ஆய்வுப்படி 3-ல் 2 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை என தெரியவந்துள்ளது. ஆதலால் தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடம் இந்நிகழ்ச்சிகளின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.
அதே சமயம் நாம் மேற்பார்வை செய்ய வேண்டியது கூடுதல் தேவையாக இருக்கிறது. நான் வேலூர் மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியாற்றிய சமயத்தில் 60 சதவீத தாய்மார்கள் மட்டுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தனர். இதனால் அங்கு தாய்ப்பால் கொடுப்பது பற்றி சிறப்பு ஆலோசகரை நியமித்த பின் 8௦ முதல் 90 வரை அதிகரித்துள்ளது. எனவே முதுகலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் தாய்ப்பால் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அவர்களை மேற்பார்வை செய்ய வேண்டியது நம் கடமையாகும் என அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி இயக்குனர் நாராயணபாபு கூறியதாவது, தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பெரியோரிடம் கூடுதல் நெருக்கத்தோடும், உடல் ஆரோக்கியத்தோடும் இருப்பதை எனது பயிற்சி காலங்களில் நான் தெரிந்து கொண்டுள்ளேன்.
எனவே குறைந்த எடையில் பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் மட்டுமே உட்கொண்டு நல்ல முறையில் உடல்நிலை தேர்ச்சி பெற்றும் வர இயலும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பேருந்து நிலையங்கள் மற்றும் பல இடங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தாய்மார்களுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது என அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து செவிலியர்கள் தாய்ப்பால் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவமனை வளாகத்துக்குள் பேரணி நடத்தி உள்ளனர். பின்னர் முடிவில் மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு மற்றும் டீன் டாக்டர் தேரணிராஜன் ஆகியோர் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கியுள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எழிலரசி மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.