தமிழகத்தில் ரேஷன் கடைகளில் முக்கிய பிரமுகர்கள் பொருட்களை வாங்குகிறார்களா?என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் வசதி படைத்த நபர்கள் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குகிறார்களா? என்பதை அலுவலர்கள் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பொருட்கள் வாங்க வருபவர்களிடம் அவற்றின் தரம் மற்றும் எடை சரியாக இருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில் கடைகளை பிரிப்பதற்கான பரிந்துரைகளை அனுப்ப வேண்டும். அத்தியாவசிய பொருட்களை பெற வரும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட வேண்டும். மேலும் சிறப்பாக பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பரிசுகள் வழங்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.