கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இங்கு சுமார் 1200 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் காலை, மாலை என 2 வேளையும் மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சிசெய்தும், முதியோர்கள் நடைபயிற்சி மேற்கொண்டும் வருகின்றனர். இதற்கிடையில் பள்ளி மைதானத்தில் ஒருபகுதியில் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மைதானத்தின் பரப்பளவு குறுகியிருக்கிறது. தாலுகாவுக்கு வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பள்ளி மைதானத்திலேயே நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், விளையாட்டுவீரர்கள் பயிற்சி மேற்கொள்ள இடையூறான சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து முன்னாள் மாணவர்கள், பேரூராட்சி நிர்வாகத்தினர் இதுகுறித்து புகார் மனு கொடுத்தனர். அத்துடன் போராட்டம் நடத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அறிந்ததும் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் மற்றும் அதிகாரிகள், காவல்துறையினர் அங்கு சென்று முன்னாள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் கூறும்போது “ஆனைமலை அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு பெரும்பாலான வீரர்கள் தேர்வாகி இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் விளையாட்டு இடஒதுக்கீடு வாயிலாக பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். பள்ளி மைதானத்தில் தாலுகா அலுவலகம் கட்டத் துவங்கியதிலிருந்து அங்கு புதர்கள் சூழ்ந்து கனரக வாகனங்கள் மைதானத்தில் சென்று மேடு பள்ளமாக ஆனது. இதன் காரணமாக மழைநீர் தேங்கிநின்றது. இதனால் பள்ளி மாணவர்களும் விளையாட்டு வீரர்களும் விளையாட முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. அத்துடன் மைதானத்தின் பரப்பளவு குறைந்துள்ளது. ஆகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி மைதானத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுத்து நிறுத்த உரியநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர்கள் கூறினர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.