காதலை ஏற்க மறுத்ததால் வாலிபர் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ராஜபாளையம் அருகிலுள்ள சொக்கநாதன் புத்தூர் சேர்ந்தவர் அருண். பட்டதாரியான இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். அம்மாணவி அருணின் காதலை ஏற்க மறுத்தும் தினமும் மாணவி கல்லூரிக்கு செல்லும் நேரம் பின்தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாணவியிடம் தனது காதலை ஏற்கும் படி கேட்டுள்ளார். அருணின் காதலை மாணவி மறுத்துவிடவே விரக்தி அடைந்த அருண் திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இருந்தும் அருணில் கை கால்களில் தீக்காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருணை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.