தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர் பலியாகும் நிலையில் இணைய வழி சூதாட்டத்தை முற்றாகத் தடை செய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்? என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ் இணைய வழி சூதாட்டத்திற்கு அடிமையாகி இலட்சக்கணக்கில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தற்கொலைக்கு முன் தம்பி எழுதிய உருக்கமான கடிதம் நெஞ்சை உலுக்கி விட்டது. தொடர்ந்து உயிர் பலிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும், இணையவழி சூதாட்டங்களை தடை செய்யாமல் காலங்கடத்தி வரும் திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
குறுக்கு வழியில் அதிக பணம் ஈட்டுவதற்கான ஆசையை தூண்டி இளைஞர்களை மாய வலையில் விழ வைக்கும் இணைய வழி சூதாட்ட செயலிகள் தமிழ் சமூகத்திற்கு மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள இளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்கு பேராபத்தாக மாறி நிற்கிறது இணைய வழி சூதாட்டங்களால் பொருள் இழப்பு, நேர இழப்பு மட்டுமின்றி தன்னம்பிக்கை உள்ளிட்ட அடிப்படை மனித நற்பண்புகளை அழித்து, இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆளாக்கி அவர்களின் வாழ்வினையே பாழ்படுத்துகிறது என்பதே வலி மிகுந்த உண்மையாகும்.
நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சமூக நல ஆர்வலர்களும் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று இணைய வழி சூதாட்டங்களுக்கு தடை விதிக்க கடந்த அதிமுக ஆட்சியின் போது அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்பின் நீதிமன்றம் மூலம் தடை நீக்கம் பெற்ற போதிலும், அடுத்த ஆறு மாதத்திற்குள் வலுவான சட்டம் இயற்றி முறையாக தடை செய்யுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி ஓராண்டு கடந்தும் இதுவரை தமிழ்நாடு அரசு தடைச் சட்டம் இயற்ற மறுப்பது ஏன்?
இணையவழி சூதாட்டங்களை தடை செய்வது குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் நீதி அரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வு குழுவானது புதிய தடை சட்டம் இயற்ற வேண்டும் என பரிந்துரைத்து இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை தமிழ்நாடு அரசு அமைதி காப்பது ஏன்?
தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் விலைமதிப்பற்ற தமிழ் இளம் தலைமுறையினரின் உயிர்கள் பறிபோய் கொண்டிருக்க சிறிதும் ஈவு இரக்கமின்றி இன்றளவும் இணையவழி சூதாட்டங்களை தடை செய்ய மறுத்து வருவது திமுக அரசின் மீது மிகப்பெரிய ஐயத்தை ஏற்படுத்துகிறது.
ஆட்சிக்கு வந்தவுடன் இணைய வழி சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாக தடை செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக யாருடைய தூண்டுதலால் இன்று வரை தடை செய்ய மறுத்து ஏமாற்றி வருகிறது என்ற கேள்வியும் எழுகிறது.
கடந்த ஜூன் மாதம் மணலியை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு தாயான தங்கை பவானி, தற்போது ராசிபுரத்தை தம்பி சுரேஷ் என திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 15 மாதங்களில் இதுவரை 28 இளைஞர்கள் பலியான கொடுமைகள் அரங்கேறிய பிறகும் திமுக அரசு தொடர்ந்து அமைதி காப்பது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்?https://t.co/2UpG9wiDcJ@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/s2JIc4MTlc
— சீமான் (@SeemanOfficial) August 5, 2022