திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் உணவு பொருள் வழங்கள் துறை அமைச்சர் அர சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவாரூர் மாவட்டத்தில் 58,721 பேர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்த வீடுகளை மாடி வீடுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இலவச எரிவாயு இணைப்புகள் இல்லாத 82,000 குடும்பங்களில் 34,000 பேருக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பத்தினருக்கும் எரிவாய் இணைப்பு பெற்று பயன் பெற எரிவாயு முகவர்கள் செயல்பட வேண்டும். அதனை தொடர்ந்து விவசாயிகள் பயன்பெற 12 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்பட்டது. அதன்படி சன்னரக நெல் குவிண்டாலுக்கு ஏற்கனவே ரூ.1960 வழங்கப்பட்டிருந்ததை ஊக்கத்தொகை உள்பட ரூ.2600 மற்றும் புதுரக நெல்லுக்கு ரூ.1940 ஆக இருந்ததை ஊக்கத்தொகை உள்பட ரூ.2015 என உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் அறுவடை காலம் தொடங்க உள்ளது.
இந்நிலையில் தமிழகம் முதல்வர் நெல்லுக்கான ஆதார விலையை செப்டம்பர் முதல் வழங்கும் மத்திய அரசிடம் கேட்டதன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் முதல் நெல்லுக்கான ஆதார விலை ரூ.100 உயர்த்தி வழங்கப்படும். இதனையடுத்து கொள்முதல் நிலைய குறைபாடுகளை தெரிவிக்க அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் தமிழக நுகர்வோர் பொருள் வாணிப கழக சார்பில் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களின் தொடர்பு எண் பலகையும், புகார் தெரிவிக்க மனு பெட்டியும் வைக்க உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மாவட்ட வாரியாக புகார்களை தெரிவிக்க தனித்தனி இலவச தொலைபேசி எண் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்மணிகளை பாதுகாத்து வைக்க நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய அளவு சாக்கு, சணல் தார்ப்பாய்கள் கூடுதலாக இருப்பு வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நாள்தோறும் 1000 நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றனர். தேவை இருப்பின் நாள்தோறும் 2000 மூட்டைகளை கொள்முதல செய்ய கொள்முதல நிலையங்களுக்கு அறுவடை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.