உலகிலேயே மிகவும் உயர்வான விருதான நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையை கொடுத்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவுநாள் ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவராக விளங்கும் இவர் தேவேந்திரநாத் தாகூர்- சாரதா தம்பதியினருக்கு மகனாக கடந்த 1861 ஆம் வருடம் மே 7-ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.
இதில் ரவீந்திரநாத் தாகூருடன் பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். வீட்டில் கடைசி பிள்ளையாக பிறந்தாலும் உலகமே ஆச்சரியப்படும் கவிஞராக ரவீந்திரநாத் தாகூர் இருந்தார். மேலும் இளம்வயதிலேயே இலக்கியம், ஓவியம் இசை, கவிதை என பன்முகத் திறமை கொண்டிருந்தார். அத்துடன் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1878 ஆம் வருடம் இங்கிலாந்து சென்ற அவர், அங்குள்ள கல்வி முறையைப் பற்றி அறிந்து கொண்டார்.
அந்த வகையில் கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்த “சாந்தி நிகேதன்” பள்ளியை ரவீந்திரநாத் தாகூர் தொடங்கினார். உலகின் கல்வியாளர்கள் இன்றும் இந்த பள்ளியை பாராட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கு படித்தவர்தான் புகழ் பெற்ற இந்திய இயக்குனர் சத்யஜித்ரே. உலகத்தரம்வாய்ந்த கீதாஞ்சலி கவிதை தொகுப்புக்காக ரவீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு கடந்த 1913 ஆம் வருடம் கொடுக்கப்பட்டது.
அந்த பரிசை பெற்ற ஆசியாவைச் சேர்ந்த முதல் நபர் எனும் பெருமை ரவீந்திரநாத் தாகூரையே சேரும். நம் ஜன கண மன தேசியகீதம் இவர் இயற்றியதே ஆகும். தன் 80வது வயதில் உடல்நலக்குறைவால் கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரவீந்திரநாத் தாகூர் கடந்த 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி இயற்கை எய்தினார். காலங்கள் கடந்தாலும் ஜன கண மன வாயிலாக ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் அவர் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.