இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் கடந்த 2020-ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மனிதர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு விதமான பிரச்சனைகளை எதிர் கொண்டனர். அதுமட்டுமின்றி கொரோனா பரவல் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளில் கூட பொருளாதார வளர்ச்சி குறைந்தது. இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால் ஏராளமானோர் வேலையில்லாமல் தவித்ததோடு போக்குவரத்து, சுற்றுலாத் துறைகள் போன்றவைகளும் முடங்கியது. இந்த கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைந்துள்ளதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில் பொருளாதார வளர்ச்சியானது 7% இருந்து 9.5 % அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த தகவலை மூடிஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொருளாதார சுழற்சியில் சிக்கல் ஏற்படும் நிலை இருப்பதால், 2022-23-ம் நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் 8.5 சதவீதமாக பொருளாதார வளர்ச்சியானது இருக்கும். அதன் பிறகு 2022-23 ஆம் தேதி நிதியாண்டில் நவம்பர் மாதத்தில் பொருளாதார வளர்ச்சியானது 7.9 சதவீதமாக அதிகரிக்கலாம். இதனையடுத்து மார்ச் மாதத்தில் பொருளாதார வளர்ச்சியானது 9.2 சதவீதமாக அதிகரிக்கலாம்.
கடந்த 2021-ஆம் ஆண்டு காலாண்டில் பொருளாதார வளர்ச்சியானது 5 சதவீதமாக இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா அலையின் தாக்கமானது குறைந்துள்ளதால் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேவைத்துறையும் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனையடுத்து ஜிஎஸ்டி வரி வசூல் மற்றும் சில்லரை வணிகம் போன்றவற்றைப் பொறுத்து பொருளாதார வளர்ச்சியானது அதிகரிக்கும்.
மேலும் 2022-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதால், மூலதனச் செலவினங்களுக்கான ஒதுக்கீடு 36 சதவீதமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்த பிறகு பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை போன்று அதிகரிக்கும் எனவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.