தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளது. இதனால் மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின்படி இடை நிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என 3 வகையான ஆசிரியர்களை நியமனம்செய்ய அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு பணியில் அமர்த்தப்படும் தற்காலிக ஆசிரியர்களில் இடை நிலை ஆசிரியர்களுக்கு ரூபாய்.7,500 ஊதியமாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.10,000 ஊதியமாகவும், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூபாய்.12,000 ஊதியம் என்ற முறையில் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 13 ஆயிரம் தற்காலிகஆசிரியர் நியமனம் குறித்து திருத்திய வழிகாட்டுமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அவற்றில் திறனுள்ள ஆசிரியர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் எனவும் வகுப்புகளில் பாடம் நடத்தி திறனை அறிந்து நியமனம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2022-2023ம் கல்வியாண்டில் காலியாகவுள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் தொடர்பாக பின்வரும் அறிகுறிகளை பின்பற்றியும், கால அட்டவணை படியும் பணிகளை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய முதன்மை அலுவலகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
# 01/06/2022தேதி வரையில் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.
# விண்ணப்பதாரரிடமிருந்து எழுந்த விண்ணப்பங்கள் நேரடியாகவோ (அல்லது) மின்னஞ்சல் மூலமாகவோ உரியகல்வி சான்றுதல்களுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
# தற்காலிக நியமனம் சார்ந்து சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால ஆணையின்படி இடைக்கால ஆசிரியர் பதவிக்கு அரசாணை எண்.12 பள்ளிக் கல்வித்துறை நாள். 30/01/2020 ன் படி வரையறுக்கப்பட்டுள்ள கல்வி தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்களை மட்டுமே தற்காலிக நியமனம் செய்யத்தக்க அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
# ஒரு காலிப்பணியிடத்திற்கு ஒன்றுக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்திருந்தால், இல்லம்தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.