Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்ட கைத்துப்பாக்கி தயாரித்த வழக்கு….வெளியான தகவல்….!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகில் புளியம்பட்டி பகுதியில் சென்ற மே மாதம் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அவர்கள் வைத்திருந்த பையில் 2 கைத்துப்பாக்கிகள், கத்தி, முக மூடிகள் போன்றவை இருந்தது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த என்ஜினீயர் சஞ்சய் பிரகாஷ் (25), கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பி.பி.ஏ. பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி (25) என்பது தெரியவந்தது.

நண்பர்களான இவர்கள் ஏற்காடு அடி வாரம் கருங்காலி எனும் இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கைத்துப்பாக்கிகள் தயாரித்து வந்தனர். ஏனெனில் அவர்கள் மக்களை காப்பாற்ற வேண்டும், இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில் துப்பாக்கி தயாரித்ததாகவும், வீரப்பன் மீது அதிகஈர்ப்பு கொண்டதால் ஏதாவது ஒரு அமைப்பை தொடங்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இவ்வழக்கு குறித்து சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த கபிலர் (21) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இவ்வாறு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த இந்த வழக்கு கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்பின் இவ்வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் சேலம் வந்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் ஓமலூர் காவல் நிலையத்துக்கு சென்று இவ்வழக்கை விசாரித்த காவல்துறையினரிடம் விசாரணை மேற்கொண்டனர். சேலத்தில் முகாமிட்டிருக்கும் அவர்கள் இவ்வழக்கில் கைதாகி சிறையிலுள்ள சஞ்சய்பிரகாஷ் உட்பட 3 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Categories

Tech |