விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் அமலாக்கத் துறை சோதனையை கண்டித்து நாடு முழுதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்து காங்கிரசார் மனுகொடுக்க திரண்டனர். பிரதமர்மோடி வீட்டையும் முற்றுகையிடும் போராட்டத்திற்காக காங்கிரசார் திரண்டதால் பதற்றம் உருவாகியது. போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரசார் போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. அதனையும் மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி போன்றோர் பங்கேற்றனர். இதன் ஒருபகுதியாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள். பேரணி நடத்தினர்.
பாராளுமன்றத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு நடைமுறையிலுள்ள நிலையில் பேரணி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அனைவரும் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேல் நாடாளுமன்றம்-ஜனாதிபதி மாளிகைக்கு இடையில் உள்ள விஜய்ஸ்சவுக் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தடுத்து வைக்கப்பட்டார். மக்களுக்காக எத்தனைமுறை வேண்டுமானாலும் போராட்டம் நடத்தி, எத்தனை முறை வேண்டுமானாலும் கைதாகுவதற்குத் தயார் என்று ராகுல்காந்தி கூறினார். இப்பேரணியின் போது காங்கிரஸ் கட்சியின் கரூர் எம்.பி. ஜோதிமணி மத்திய அரசுக்கு எதிராகத் தொடர் முழக்கங்களை எழுப்பிய சூழ்நிலையில் அவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர். இந்த நிலையில் பேசிய ஜோதி மணி, விலைவாசி அதிகரிப்பு மற்றும் வேலையின்மைக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும் என்று கூறினார்.
இதேபோன்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அப்போது மத்திய அரசு எவ்வாறு இந்த பிரச்சனை மீது மட்டும் அவர்கள் செவி சாய்ப்பார்கள் என்றும் மக்களுடைய உணர்வு, துன்பம், பிரச்சனை மற்றும் சுமைகளை எடுத்துச்சொல்ல வேண்டிய கடமை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளுக்கும் உள்ளதாகவும் தெரிவித்தார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், GST உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து முற்றுகை போராட்டம் நடத்த முற்பட்டபோது காவல்துறையினர் எங்களைக் கைது செய்கின்றனர். அவ்வாறு எந்த கைது நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து போராடுவோம் என்று விஜய்வசந்த் எம்.பி. தெரிவித்தார். இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் டெல்லி கிங்ஸ் வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.