திருப்பூர் அருகே வீணாகும் தண்ணீரை சரிசெய்ய கோரி நடுரோட்டில் வேஷ்டி சட்டையை கழட்டி முன்னாள் திமுக செயலாளர் குளியல் போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையை காட்டிலும் அதிகமான தண்ணீர் பஞ்சம் விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வெங்கடேஸ்வரா நகர் பகுதிக்கு தண்ணீர் வினியோகிக்க பயன்படும் குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலைகளில் வீணாக பெருக்கெடுத்து ஓடி வந்துள்ளது. இது குறித்து அப்பகுதி முன்னாள் திமுக செயலாளர் ஜியாவுல் ஹக் என்பவர் பலமுறை திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரம் அடைந்த ஜியாவுல் நேற்றையதினம் மாலை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் சாலையில் தனது சட்டை மற்றும் வேஷ்டியை கழட்டி துவைக்க ஆரம்பித்ததுடன் அவரும் தண்ணீரிலேயே சோப்புப் போட்டுக் குளித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவருக்கு ஆதரவாகத் திரண்டனர். பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் முன்னாள் திமுக செயலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.