Categories
கிரிக்கெட் விளையாட்டு

”இதுவெறும் ஆரம்பம் தான்” கோப்பையை வென்ற வங்கதேச கேப்டன்!

யு19 உலகக்கோப்பையை வங்கதேச மக்களுக்கு அர்ப்பணிப்பதாகவும், வங்கதேச கிரிக்கெட்டின் வளர்ச்சியில் இதுவெறும் தொடக்கப்புள்ளி மட்டுமே என வங்கதேச கேப்டன் அக்பர் அலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக நேற்று நடந்த இறுதிப்போட்டியில் அதர்வா பந்தை மிட்விக்கெட்டில் அடித்து வங்கதேச மக்களின் 20 வருடக் காத்திருப்பைப் ரகிபுல் போக்கினார். ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் முதல்முறையாக வங்கதேச உலகக்கோப்பையைக் கைப்பற்றியதை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகத் திகழ்ந்த வங்கதேச அணியின் கேப்டன் அக்பர் அலி பேசுகையில், ”எங்களது எதிர்கால கிரிக்கெட் வளர்ச்சிக்கு முக்கிய ஏணியாக இந்தத் தொடர் அமைந்துள்ளது. இதுவெறும் தொடக்கம் மட்டுமே.

இந்த உலகக்கோப்பையை வங்கதேச மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். நாங்கள் வெற்றிபெற்றாலும், தோல்வியடைந்தாலும் வங்கதேச மக்கள் எப்போதும் ஆதரவளித்தே வந்துள்ளனர். இந்த அணியில் வங்கதேச மக்கள் தான் 12ஆவது வீரர்.

இந்தப் போட்டியின்போது அதிகளவில் வங்கதேச மக்கள் மைதானத்திற்கு வந்து ஆதரவளித்தது ஆச்சரியமாக உள்ளது. ஒன்றரை வருடங்களுக்கு முன்னதாக அணி கட்டமைக்கப்பட்டபோது, எங்கள் அனைவருக்கும் ஒரு கனவு இருந்தது. கனவு என்பதை விட இலக்கு நிர்ணயித்துக்கொண்டோம். அந்த இலக்கை அடையும் திறன் எங்களிடம் இருப்பதாக நம்பினோம்.

இந்த நிமிடம் இலக்கை அடைந்ததோடு, கனவையும் நிறைவேற்றியுள்ளோம். அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்றார்

Categories

Tech |