கடந்த 1979 ஆம் ஆண்டு ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் பின் ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடு என்பதால் அதற்கு சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டுள்ளது. இதில் ஒன்று அந்நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவதாகும். சமீபமாக சமூக வலைதளங்கள் மூலமாகவும் மற்றும் பொது இடங்களில் ஹிஜாபை அகற்றியும் சிலர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் மீது ஈரான் அரசு கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் ஈரானில் அண்மையில் வெளியான ஐஸ்கிரீம் விளம்பரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானைச் சேர்ந்த ஐஸ்கிரீம் நிறுவனமான “டோமினோ” இரண்டு விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் ஒரு பெண் ஐஸ் க்ரீம் சாப்பிடுவது போல சித்தரிக்கப் பட்டு இருந்தது. மற்றொரு விளம்பரம் பாலியல் உணர்வுகளை தூண்டும்படியாக அமைந்துள்ளது என்றும் அந்த விளம்பரத்தில் தோன்றும் பெண் ஹிஜாப் அணியவில்லை என்றும் சர்ச்சைகள் எழுந்தன. இந்த விளம்பரத்தால் கோபமடைந்த ஈரானிய மதகுருமார்கள் உள்ளூர் ஐஸ்கிரீம் உற்பத்தியாளர் டோமினோஸ் மீது வழக்குத் தொடருமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். இந்த விளம்பரங்கள் ஈரானின் பொது கண்ணியத்திற்கு எதிரானது என்றும், பெண்களின் மதிப்புகளை அவமதிப்பதாக இருப்பதாகவும் ஈரானிய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து ஈரானின் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம் கூறியதாவது, “அந்நாட்டின் கலை மற்றும் சினிமா பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஹிஜாப் மற்றும் கற்பு விதிகளை அவமதித்த காரணத்தால் பெண்கள் இனி விளம்பரங்களில் நடிக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த உத்தரவு கலாச்சார புரட்சியின் சுப்ரீம் கவுன்சில் வழங்கிய தீர்ப்புகளுக்குள் அடங்கும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வர்த்தக விளம்பரங்கள் தொடர்பான ஈரான் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் இந்த தடை பொருந்தும் என்றும், இது பெண்கள் மட்டுமின்றி குழந்தைகள் மற்றும் ஆண்களை கருவிகளாக உபயோகிப்பதை தடை செய்கின்றது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.