தாய்லாந்து நாட்டின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சோன்புரி மாகாணம் சத்தாகிப் நகரில் மவுண்டன் பி நைட்ஸ்பாட் என்னும் இரவு நேர மது பார் ஒன்று அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த மதுபாரில் வழக்கம்போல் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் திரண்டு மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மதுபாரில் இசை கச்சேரியும் நடைபெற்றது. மது பிரியர்கள் அனைவரும் மது அருந்தியவாறு இசையை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு ஒரு மணி அளவில் பாரில் திடீரென தீப்பிடித்துள்ளது.
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது அங்கு இருந்தவர்கள் தீ தீ என அலறியபடி பாரை விட்டு வெளியே ஓட்டம் பிடித்துள்ளனர். சிலரின் ஆடையில் தீ பற்றிய நிலையில் வெளியே ஓடி சென்றுள்ளனர். இதற்கிடையே மளமளவென எரிந்த தீ ஒரு நிமிடத்திற்குள்ளாக பாரின் நாலாபுரமும் பரவி சூழ்ந்து கொண்டாதால் பலர் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இருந்த போதிலும் இந்த கோர விபத்தில் 4 பெண்கள் உட்பட 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல் அடையாளம் காண முடியாத அளவில் எரிந்து கருகியது. மேலும் இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது பற்றி விசாரணை நடத்த அந்த நாட்டு அரசு உத்தரவிட்டிருக்கிறது. முன்னதாக கடந்த 2009 ஆம் வருடம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாங்காங்கில் உள்ள ஒரு இரவு மதுபாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 66 பேர் பலியானது நினைவு கூறதக்கதாகும்.