தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளிவிழாவானது சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் கெளரவ விருந்தினராக பங்கேற்றார். இவ்விழாவில் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பரிசுகளை வழங்கி கெளரவித்தார். அத்துடன் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி “சட்டத்தின் ஆட்சியை நீதியின் வாயிலாக நிலைநாட்டி அமைதி பூங்காவாக தொடர்ந்து இருக்க வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். மனிதஉரிமை அவரவர் பிறப்புரிமை, அதை மதித்து நடப்பது அனைவரின் கடமை.
அனைவருடைய மனித உரிமையை காக்க திராவிடமாடல் அரசு உறுதிப்பூண்டு இருக்கிறது. மனித உரிமைகள் பாதிக்கப்படும் சூழல் இருந்தால் அதனை காப்பாற்றும் பாதுகாவலராக முதலமைச்சர் விளங்குகிறார். சிறந்த முதலமைச்சராக தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டுப்பாடுடன்கூடிய சுதந்திரமே நன்மை பயக்கும். இது மதசார்பற்ற நாடு ஆகும். இங்கு அனைவரது பண்பாடும் காக்கப்படும்” என்று கூறினார். இதையடுத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பேசியதாவது “மனித உரிமைகள் தொடர்பாக பொதுமக்களிடம் பல வழிமுறைகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மனிதஉரிமைகளை காப்பாற்ற மக்கள் உயர் நீதிமன்றத்திற்கு வருகின்றனர்.
இந்நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும். மனிதஉரிமைகள் பற்றி அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மனித உரிமைகள் ஆணையத்தை உருவாக்கியவர் கலைஞர் ஆவார். மனிதஉரிமை காக்கும் மாண்பாளர் கலைஞரை நினைவு கூறுவது இத்திட்டத்தில் பொருத்தமாக இருக்கும். சுய மரியாதை ஒவ்வொரு மனிதனுக்கும் உயிரினும் மேலானது ஆகும். தனிமனிதனின் சுயமரியாதை எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்ப கூடாது என உறுதியாக இருக்கிறோம். இதற்கிடையில் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையே மனித உரிமைகள் தான். பல உரிமைகளை குறித்து அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது. அந்த கடமையிலிருந்து ஒருபோதும் தவறமட்டோம். நீதித் துறையின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம். மாநில மனிதஉரிமை ஆணையத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். அத்துடன் விசாரணை குழுவில் காவல்துறை எண்ணிக்கை அதிகரிக்க முடிவெடுக்கப்படும். மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளமானது தமிழில் உருவாக்கப்படும். கொள்கை கோட்பாடுகள் தொடர்பாக அனைவரும் அறிய பயிற்சிமுகாம் ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.