பொக்லைன் வாகனம் தலையில் விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வானாபுரம் பகுதியில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சந்தோணிபாய் என்பவர் பொக்லைன் வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென பொக்லைன் வாகனம் பழுதாகியுள்ளது. இதனால் சந்தோணிபாய் ஜாக்கி எந்திரத்தின் மூலம் பொக்லைன் வாகனத்தை மேலே தூக்கியுள்ளார். அப்போது திடீரென பொக்லைன் வாகனம் சந்தோணிபாயின் தலை மீது விழுந்துள்ளது.
இதில் படுகாயம் அடைந்த அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.