திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் இரண்டு மகன்களுடன் தந்தை குளத்தில் மூழ்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் கரியமாணிக்கம்புரத்தில் வசித்து வருபவர் செல்வராஜ். தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் தனது சொந்த ஊரான கொல்லத்தில் நடைபெறும் திருமணத்திற்கு சென்றிருந்தார். நேற்று மாலை தனது இரண்டு மகன்களையும் அப்பகுதியில் உள்ள தேவி கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கோவிலில் உள்ள குளத்தில் குளிக்கும் சமயம் இரண்டாவது மகன் விக்னேஷ் ஆழம் அதிகம் உள்ள இடத்திற்கு சென்று தண்ணீரில் மூழ்கினார் அவரது சத்தம் கேட்டு அவரை காப்பாற்ற தந்தையும் மூத்த மகனும் குளத்திற்குள் குதிக்க மூவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கோவிலுக்கு சென்றவர்களை வெகு நேரமாகியும் காணாததால் உறவினர்கள் கோவிலுக்கு தேடி வந்துள்ளனர். அப்பொழுதுதான் அவர்கள் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்துள்ளது. திருமணத்திற்காக ஊருக்கு வந்தவர்கள் மரணமடைந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.