வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலை இன்று 4ஆவது போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் களம் இறங்கினர். இவர்கள் இருவருமே அதிரடி தொடக்கம் தந்தனர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் ஐந்தாவது ஓரில் 50ஐ கடந்தது.. அதன் பிறகு அதே ஓவரின் நான்காவது பந்தில் ஹுசைன் பந்துவீச்சில் அதிரடியாக ஆடி வந்த ரோகித் சர்மா 16 பந்துகளில் 33 ரன்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரி) எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அதனைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிவந்த சூர்யகுமார் யாதவும் 24 (14) ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு தீபக் ஹூடாவும், ரிஷப் பண்ட்டும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடிய நிலையில் ஹூடா 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ரிஷப் பண்ட்டும் சஞ்சீவ் சாம்சனும் ஜோடி சேர்ந்த நிலையில், சிறப்பாக ஆடிவந்த ரிஷப் பண்ட் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 (31) ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 6 ரன்னில் வெளியேறிய நிலையில், அக்சர் பட்டேலும், சாம்சனும் இணைந்து கடைசியாக அதிரடி காட்ட இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது. அக்சர் பட்டேல் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 8 பந்துகளில் 20 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 23 பந்துகளில் 30 ரன்களுடனும் (1 சிக்ஸர் 2 பவுண்டரி) களத்தில் இருந்தனர். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கி ஆடி வருகிறது..