இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தர கோரி 4 லட்சம் இளைஞர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற இயக்கம் முடிவு செய்துள்ளது.
திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட குழு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் அவ்வியக்கத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்தில் இளைஞர்களின் நலனுக்கான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில்,
தமிழகம் முழுவதும் சுமார் 96 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். தமிழகத்திலும் கல்வித்துறை, மின்சாரத்துறை, அஞ்சல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.
ஆகையால் நிரப்பப்படாமல் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பவும், இளைஞர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவும் வருகின்ற 26 ஆம் தேதி முதல் மார்ச் 5 வரை நான்கு இளைஞர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.