சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து சூலூர்பேட்டை போகும் மின்சார ரயிலில் சென்டிரல் ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி. முத்துக் குமார், கொருக்குப்பேட்டை ரயில்வே இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் பயணிகள் அமரும் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து விசாரணையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளிலிருந்து அரிசியை வாங்கி மூட்டை மூட்டையாக கொருக்குப் பேட்டை, தண்டையார் பேட்டை, திருவொற்றியூர், மீஞ்சூர் போன்ற ரயில் நிலையங்களில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு மின்சார ரயிலில் கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது. சென்ற 2 தினங்கள் இது போன்று நடத்தப்பட்ட சோதனையில் 3 டன் ரேஷன்அரிசியை பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறையினர் அதை குடிமைப்பொருள் உணவு பாதுகாப்புதுறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.