இலங்கை நாட்டின் தென் பகுதியிலுள்ள ஹம்பந்தோட்டா ஆழ்கடல் துறைமுகமானது, சீனாவிடம் கடன்பெற்று மேம்படுத்தப்பட்டது. அக்கடனை திருப்பி செலுத்த முடியாததால், அந்த துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு அளித்துள்ளது. இதற்கு இந்தியாவானது கடும் எதிர்ப்பை அப்போது பதிவு செய்திருந்தது. இதனிடையில் சீனாவின் “யுவான் வாங்-5” எனும் உளவுகப்பல், ஹம்பன்தொட்டா துறைமுகத்துக்கு வருவதாக தகவல் வெளியாகியது. செயற்கைகோள் கண்காணிப்பு, கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வசதிகள் போன்றவற்றை கொண்டதாக கூறப்படும் சீனாவின் அதிநவீன உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்கு வருவது பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது.
இதனால் இந்தியா தன் கவலையை இலங்கையிடம் பதிவுசெய்ததாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் உளவுகப்பல் வருகையை ஒத்திவைக்கும்படி சீனாவிற்கு, இலங்கை அரசானது கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் சீன தூதரகத்திடம் அளித்த கோரிக்கையில், திட்டமிட்டபடி கப்பல் வருகையை முன்னெடுத்து போகவேண்டாம் என்றும் கப்பல் வருகையை நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சீனாவின் உளவு கப்பல் தற்போதைக்கு இலங்கையில் நிறுத்தப்படாது என தெரிகிறது. முன்பாக நேற்று சீனாவின் உளவு கப்பல் பயணம் நிறுத்தப்படும் என இலங்கை அரசியல் கட்சிகள் மத்தியில் அந்நாட்டு அதிபர் ரனில் விக்ரம சிங்கே உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.