செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் உபரி நீர் கால்வாய் திட்ட பணி எந்த அளவில் இருக்கிறது என்ற கேள்விக்கு, அந்த திட்டத்தை கிடப்பிலே போட்டுவிட்டார்கள். மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, ஓமலூர் சட்டமன்ற தொகுதி, சங்ககிரி சட்டமன்ற தொகுதி, எடப்பாடி சட்டமன்ற தொகுதியில வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்புவதற்கு சுமார் 565 கோடி ரூபாயில் திட்டம் தொடங்கப்பட்டு, முதல்கட்டமாக சுமார் 6 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் பணியை தொடக்கி, 6 ஏரியையும் நிரப்பினோம். அதோடு அந்த பணி அப்படியே இருக்கு.
அதன் பிறகு ஆமை வேகத்தில் 100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம் சென்று கொண்டிருக்கிறது. இந்த அரசு, இந்த பணியை வேகமாகவும், துரிதமாகவும் செய்ய வேண்டும் என நான் சட்டமன்றத்தில் தெரிவித்தேன். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் தெரிவித்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் நேரில் சென்று பார்வையிட்டும் சென்றும் இன்னும் அந்த பணி வேகமாக செய்யவில்லை. திராவிட முன்னேற்றக் கழகமானது ஆட்சி பொறுப்பை ஏற்று 14 மாதங்கள் ஆகியும், ஆமை வேகத்தில் அந்த பணி நடந்து கொண்டிருக்கிறது.
இன்றைய தினம் எல்லாரு கண்ணுக்கு முன் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் ஏராளமான உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அந்தப் பணி முடிவடைந்து இருந்தால் இன்று 100 ஏரிகளையும் நிரப்பியிருக்கலாம். இதேபோன்று அத்திக்கடவு அவிநாசி திட்டத்தையும் வேகமாக துரிதமாக குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என்பதற்காக நான் முதல்வராக இருக்கும்போது அம்மாவுடைய அரசு அந்த பணியை வேகமாக நிறைவேற்றிக் கொண்டிருந்தது.
இந்த மார்ச் மாதத்திற்குள் முடித்திருக்க வேண்டும். என்ன காரணமோ தெரியவில்லை… அந்தப் பணியும் மெத்தனமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தையும் முடித்து இருந்தால் இன்று வெள்ளநீரை அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் நீரேற்றி மூலமாக ஏரிகளில் நிரப்பியிருக்கலாம். ஆனால் இந்த அரசாங்கத்திற்கு அதுல எல்லாம் அக்கறை கிடையாது என விமர்சனம் செய்தார்.