சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தார் போல் பெரிய பிரார்த்தனை தளமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இந்தக் கோவிலுக்கு பக்தர்கள் வந்து வேண்டி கேட்கும் வரம் அனைத்தையும் தரும் சக்தி உடையவள் கரூர் மாரியம்மன். இந்த திருக்கோயிலில் கம்பம் விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவின்போது தொடக்க நிகழ்ச்சியாக காப்பு கட்டுதல் ஒரு திருவிழா போல் நடைபெறும். மேலும் அக்னி சட்டி ஏந்துதல், அழகு குத்துதல், காவடி எடுத்தல், பால்குடம், மாவிளக்கு ஏற்றுதல், பொங்கல் வைத்தல் போன்ற பிரார்த்தனைகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிறைவேற்றுவது வழக்கம்.
குறிப்பாக கம்பத்திற்கு தயிர் சாதம் படைத்து வழிபடுவது விசேஷமாக கருதப்படுகிறது. இந்த படையலுக்கு பிறகு கம்பத்திற்கும் கரூர் மாரியம்மனுக்கும் மாலை மாற்றும் வைபவம் நடைபெறும். அதன் பின் சிறப்பான வழிபாட்டுடன் கம்பம் கோவிலில் இருந்து அமராவதி ஆற்றுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து முடித்ததும் கம்பம் ஆற்றில் விடப்படும். அந்த சமயத்தில் நடைபெறும் வானவேடிக்கையை காண பக்தர்களுக்கு இரு கண்கள் போதாது. இந்தத் திருவிழா மொத்தம் 22 நாட்கள் நடைபெறும்.
இந்த காலங்களில் கிராமிய நடனங்கள், கூத்து கரகாட்டம், பக்தி சொற்பொழிவுகள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். மேலும் அம்மன் திரு வீதி உலா வரும் போதெல்லாம் மாவடி ராமசுவாமி என போற்றப்படும் கரூரின் காவல் தெய்வமான ராமர் கூடவே எழுந்தருள்வார். இவர் தான் மாரியம்மனின் சகோதரர் ஆவார். இதனை அடுத்து இந்த திருவிழாவை பொருத்தவரை மஞ்சள் நீராட்டு விழா, மங்களகரமான நிறைவு நிகழ்ச்சியாக அமைகிறது.
குறிப்பாக மற்ற நாட்களில் அம்மனை அமர்ந்த நிலையில் அலங்கரிக்கும் அர்ச்சகர்கள் பல்லக்கு அன்று அம்மன் ஓய்வெடுப்பதை உணர்த்தும் வண்ணம் சற்று சாய்ந்த நிலையில் சயன கோளத்தில் அலங்கரிப்பர். இதனை அடுத்து பக்தர்கள் தரும் நீர்மோர், பானகம், வடை பருப்பு, தாம்பூலம் போன்றவற்றை கொண்டு அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும். இந்தக் கோவில் 100 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது. ஆண்டு முழுவதும் அடுத்தடுத்து பல திருவிழாக்களை காணும் கரூர் மாரியம்மனை நினைத்து வணங்குபவரின் கவலைகள் கரைந்து போகும்.