இந்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதிய விகிதத்தில் முரண்பாடு காணப்பட்டதால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு, ஊதிய விகிதங்கள் மாற்றி அமைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதிய உறவு சலுகை பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அரசாணைக்கு முரணாக உள்துறை, கல்வி, வருவாய், சுகாதார, நிதி உள்ளிட்ட துறைகளில் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளில் சேர்ந்த 4500 பேருக்கு இந்த அரசாணை பலன்ங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனைப் போல தங்களுக்கு ஊதிய உயர்வு பலன்களை 18% வட்டியுடன் வழங்க உத்தரவிடக்கோரி வேளாண் துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியில் உள்ள 18 பேர் கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வி.அருண்குமார்,கடந்த 2010 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை என்பது 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கு பொருந்தாது என்றும் மற்ற துறைகளில் 2009 க்கு பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டதா என்பதை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று அரசுக்கு 2 வார கால அவகாசம் வழங்கிய நீதிபதி இந்த வழக்குகளில் உள்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம், நீதி உள்ளிட்ட துறைகளை எதிர்மனுதாரர்களாக சேர்த்தும் உத்தரவிட்டு, கடந்த 2009 ஆண்டுகளுக்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பண பயன்கள் வழங்கப்பட்டுள்ளதா என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.