இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சி.எஸ்.ஐ.ஆர் ஆகும். இந்த நிறுவனம் நாடு முழுவதும் 38 ஆய்வகங்களை கொண்டுள்ளது. இதில் 4,600 விஞ்ஞானிகள், 8 ஆயிரம் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனம் விண்வெளி , கட்டமைப்பு , கடல் அறிவியல், உயிர் அறிவியல், உலோகம், இரசாயனங்கள், சுரங்கம், உணவு, பெட்ரோலியம், தோல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.சிஎஸ்ஐஆர்-ன் இயக்குநர் ஜெனரலாக இருந்த சேகர் மாண்டே கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் சிஎஸ்ஐஆர்-ன் புதிய இயக்குநர் ஜெனரலாக மூத்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். மேலும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறையின் செயலாளராகவும் பொறுப்பேற்பார். இவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர். தனது பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்துள்ளார். தற்போது காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் மத்தியில் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குனராக உள்ளார். மேலும் ஆராய்ச்சி துறையில் 25 ஆண்டுகள் அனுபவமுள்ள கலைச்செல்வி மின்வேதியியல் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளார். இவர் 125க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள்மற்றும் 6 காப்புரிமைகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.