வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. தற்போது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்தது. இந்நிலையில் எம். எல் .ஏ. ஜி.கே. மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன், ரங்கநாதன், ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் கொம்புராஜ், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர்.
அதன்பின்னர் எம். எல். ஏ. ஜி.கே. மணி கூறியதாவது. ஒகேனக்கல் முதல் மேட்டூர் பூம்புகார் வரை மிகப் பெரிய அளவில் வெள்ளம் சேதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒகேனக்கல் தமிழகத்தில் மிகப்பெரிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. இதனால் ஒகேனக்கல் படித்துறையில் இருந்து நீரேற்றும் நிலையம் வரை பெரிய தடுப்பு சுவர் கட்ட வேண்டும். மேலும் ஆற்றில் ஓடும் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இந்த தண்ணீரை நமது மாவட்டத்தில் உள்ள ஏரி குளம் ஆகியவை நிரப்புவதற்கான அரசு உபநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.