தேவூர் அருகே காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு சென்ற 4-ம் தேதி வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் காவேரி கரையோர பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகள், விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதுபோலவே தேவூர் காவேரிப்பட்டி பகுதியில் இருக்கும் வயல்வெளிகள், குடியிருப்புகள், மயானம், கோவில்கள் என தண்ணீர் சூழ்ந்தது.
இதனால் வருவாய்த் துறையினர் பொதுமக்களை முகாமில் பாதுகாப்பாக தங்க வைத்தார்கள். மேலும் அவர்களுக்கு உணவு, உடைகளை வழங்கினார்கள். இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் காவேரி ஆற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் அண்ணாமலையார் கோவில் அருகே உள்ள பாலத்தில் தண்ணீர் வடிந்ததால் போக்குவரத்து தொடங்கியது.
மேலும் தண்ணீர் சூழ்ந்திருந்த காவேரிப்பட்டியில் இருக்கும் குடியிருப்புகள், கோவில்கள் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் வெள்ளத்தால் சேதமடைந்த உடமைகள் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தார்கள். இதன் பெயரில் சங்ககிரி உதவி ஆட்சியர் சௌமியா தலைமையிலான அதிகாரிகள் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.