வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசுகளுக்கு கட்டாயமில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்று மத்திய அரசு விளக்கம் தந்திருக்கிறது.
வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசுகளுக்கு கட்டாயமில்லை என்று ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதனால் இட ஒதுக்கீட்டை நம்பி இருக்கக்கூடிய பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது. வேலைவாய்ப்பு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சியினர் பேசினார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து பதில் கொடுத்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு குறித்து மத்திய அரசிடம் நீதிமன்றம் கருத்து கேட்கவில்லை என்று கூறினார். 2012ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது எடுக்கப்பட்ட முடிவை மேற்கோள்காட்டி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறிய அவர், இதற்கும் மத்திய அரசிற்கும் சம்மந்தமில்லை என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள்.