வெஸ்ட் இண்டீஸ் அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று அசத்தியது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் இரவு 8 மணிக்கு தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் விளையாடாத நிலையில், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்) களமிறங்கினர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 40 பந்துகளில் 64 ரன்கள் (8 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார்.. மேலும் ஹூடா 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 24 பந்துகளில் 38 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 28 (16) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓடியன் ஸ்மித் 3 விக்கெட் வீழ்த்தினார்..
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15 .3 ஓவரில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணியில் சிம்ரன் ஹெட் மேயர் மட்டும் 35 பந்துகளில் 56 ரன்கள் (5 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்தார்.. மற்றபடி யாரும் நிலைத்து நிற்கவில்லை.. சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்திய அணியில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.