பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் ஆழியாறு அணை, காடம்பாறை, அப்பர் ஆழியார் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து இருக்கிறது. இதனை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில் தற்போது 118 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக உபரி நீர் கடந்த நான்கு நாட்களாக வெளியேற்றப்பட்டு வருகின்றது.
நேற்று விடுமுறை என்பதால் ஆழியாறு பூங்கா அணைப்பகுதியை பார்வையிட கோவை திருப்பூர் பாலக்காடு உள்ளிட்ட பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். அதில் பலர் அணையின் மதகுகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் பகுதிக்கு சென்றுள்ளனர். அது தடை செய்யப்பட்ட பகுதியாகும் ஆனால் அங்கு சுற்றுலா பயணிகள் தடையை மீறி சென்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இதனால் அந்த பகுதியில் கொஞ்சம் கவனம் சிதறி தவறி விழுந்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது.
ஆனால் அதனை உணராமல் சுற்றுலா பயணிகள் சிலர் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சொல்கின்றார்கள். இதற்கு இடையே அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆழியாறு போலீசார் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்புகின்றனர். அணை மற்றும் தடை செய்ய பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.